சிவராத்திரி விரதம் கடைபிடிப்பது எதற்கு -யார் முழுமுதற் கடவுள்.

 

'ஒரு மகா பிரளயத்தில் உலகம் மூழ்கிப் போனபோது வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டெடுத்த திருமால், அதன் பொருட்டு சற்றே கர்வம் கொண்டவரானார்.
அவர் மீண்டும் பூலோகத்தில் உயிர்களை உற்பத்தி செய்ய நினைத்து, தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மாவைத் தோற்றுவித்தார். படைக்கும் திறனை பிரம்மாவுக்கு அளித்து விட்டு பரம திருப்தியுடன் பாற்கடலுக்குச் சென்று உறக்கத்தில் ஆழ்ந்தார்.
விஷ்ணுவின் கட்டளைப்படி பிரம்மா சகல ஜீவராசிகளையும் படைத்து உலகத்தை நிரப்பினார். பின், மூவுலகங்களையும் சுற்றிப்பார்த்து தன் படைப்பின் வினோதங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அப்போது அவருக்கு மதிமயக்கம் ஏற்பட்டது. இத்தனை உயிர் வர்க்கங்களைப் படைத்த தன்னைவிட, இந்த உலகத்தில் வேறு யாரும் சிறந்தவரில்லை என்று ஆணவம் எழுந்தது.
'நானே முழுமுதற் கடவுள்' என்று மார்தட்டிக் கொண்டார் பிரம்மா. இதனால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை ஏற்பட்டது.
'பிரம்மனே! வீண் அகங்காரம் பிடித்து அலையாதே. உலகங்களில் உயிர்களைத் தோற்றுவித்தது நீதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், கடலையும் கடல் சூழ்ந்த பூமியையும், திசைகளையும் மலைகளையும், இன்னும் பல உலகங்களையும் மேலான உயிர்களையும் படைத்தவன் நான்தான்.
ஏன், பிரம்மனாகிய உன்னை உருவாக்கியவனும் நானே தான்! உயிர்களைப் படைக்கும் சக்தியை உனக்குத் தந்தவனும் நான்தான். எனவே, என்னுடன் மோதாதே. உன்னிலும் பெரியவன் நான்தான் என்பதைப் புரிந்து கொள்' என்றார் விஷ்ணு.
ஆனாலும், நீ பெரியவனா நான் பெரியவனா என்னும் மோதல் ஒரு முடிவுக்கு வருவதாயில்லை. வாக்குவாதம் நாள்கணக்கில் நீண்டுகொண்டே போக, இந்திரன்முதலான தேவர்களும், வசிஷ்டர் முதலான ரிஷிகளும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்து
தோற்றுப் போனார்கள்.
வாக்குவாதம் முற்றி, பிரம்மனும் விஷ்ணுவும் யுத்தம் செய்யவே தொடங்கிவிட்டார்கள். இருவரும் ஒருவர்மீது ஒருவர் அஸ்திரங்களைச் செலுத்திக்கொண்டிருந்தபோது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
இருவருக்கும் இடையே ஒரு பெரிய அக்னிப் பிழம்பு வானளாவத் தோன்றியது. அந்த அக்னிப் பிழம்பில் பிரம்மா, விஷ்ணு இருவரின் அஸ்திரங்களும் பாணங்களும் கலந்து மறைந்தன.
ஆதியும் அந்தமும் தெரியாத அந்த ஜோதிப் பிழம்பைக் கண்டு விஷ்ணுவும் பிரம்மனும் கலக்கமடைந்தார்கள். அப்போது அந்த அக்னிப் பிழம்பின் நடுவிலிருந்து ஓர் அசரீரி கேட்டது.
'உங்களில் யார் இந்த ஜோதியின் அடியையோ முடியையோ முதலில் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர். அவரே பரப்பிரம்மம்!' என்று கூறியது.
திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டு அக்னிப் பிழம்பின் அடியைக் காணப் புறப்பட்டார். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்தார்.
இருவரும் போய்க் கொண்டே இருந்தனர். அடியையும் முடியையும் இருவராலும் காணமுடியவில்லை. விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பாதாளத்திலிருந்து பூலோகத்துக்குத் திரும்பிவிட்டார். அன்னப்பறவையாக மாறிப் பறந்து கொண்டிருந்த பிரம்மனும் சோர்ந்துபோகத் தொடங்கினார்.
அப்போது அவரெதிரே, தாழம்பூ மடல் ஒன்று மேலிருந்து கீழே விழுந்துகொண்டிருந்தது. அது ஜோதி வடிவாகிய சிவனின் சிரசிலிருந்துதான் கீழே வந்துகொண்டிருந்தது.
பிரம்மன் அந்தத் தாழம்பூவிடம், ஜோதியின் முடியைத் தான் கண்டுவிட்டதாகத் தன்னுடன் வந்து பொய்சாட்சி கூறுமாறு கேட்டுக்கொண்டு திரும்பவும் புறப்பட்ட
இடத்துக்கே வந்து சேர்ந்தார்.
விஷ்ணுவிடம், அக்னிப் பிழம்பின் முடியைத் தரிசித்து விட்டதாகப் பொய் கூறினார்.
ஆனாலும் பிரம்மா, விஷ்ணு இருவருமே இந்த ஜோதி சொரூபம் தங்களுக்கும் மேலான சக்தியே என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்.
'அனைத்துக்கும் மேலான பரம்பொருளே! தங்களின் பெருமையையும் சக்தியையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம். கருணையுடன் தாங்கள் எங்களுக்குத் தரிசனம் தந்து அருள் பாலிக்கவேண்டும் பெருமானே' என்று அடி பணிந்தனர்.
ஜோதியின் சுடர் ஒளிக்குள்ளிருந்து சூலமும் உடுக்கையும் ஏந்தியவராக, புலியாடை அணிந்தவராக, சந்திரனை ஆபரணமாகக் கொண்டு, சிரசில் கங்கையைத் தாங்கியவராக அருள்பாலிக்கும் வடிவுடன் சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
'திருமாலே! நான்முகனே! உங்களுக்குள் எதற்காக இந்த வீண் சச்சரவு? தேவையற்ற அகந்தையை மனத்தில் வளர்த்துக்கொண்டு மற்றவருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினால், கலக்கமும் குழப்பமுமே
மிஞ்சும். நிர்மலமான மனத்துடன் தத்தம் கடமையைச் சரிவரச் செய்பவர் எல்லோருமே பெரியவர்கள்தான்' என்று அறிவுரை கூறி ஆசீர்வதித்தார். அத்துடன் மிக உன்னதமான சிவ தத்துவத்தையும் திருமாலுக்கு உபதேசித்தார். திருமால் அதை பிரம்மனுக்கு உபதேசித்தார்.
இந்த விதமாக விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் இடையே ஒளி வடிவாக, சிவபெருமான் விசுவரூப தரிசனம் தந்த காலம் மாசி மாதமும் தேய்பிறைச் சதுர்த்தசியும் கூடிய இரவுக் காலம். அதாவது, மகா சிவராத்திரி காலம்.
பின் சிவபெருமான் இருவருக்கும் அருள்பாலித்து, 'நீங்கள் விரும்புவது எதுவானாலும் என்னிடம் கேட்கலாம்' என்றார்.
விஷ்ணுவும் பிரம்மாவும் அவரைப் போற்றித் துதித்து, 'அண்ட சராசரங்களுக்கும் மூலமானவரே! அனல் வடிவாகத் தோன்றிய தங்களின் ஜோதிக்குள், எங்களின் சக்கராயுதம் முதலான அஸ்திரங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. தயைகூர்ந்து அஸ்திரங்களை மீட்டுத்தர வேண்டும்' என்று வேண்டினார்கள்.
'பிரம்மனே! திருமாலே! நான் உங்களுக்குத் தரிசனம் தந்த இந்த ராத்திரியே உமையவள் எம்மை விருப்பத்துடன் பூஜித்து மகிழ்ந்த சிவராத்திரியாகும். இந்த ராத்திரியில் விரதமிருந்து பூஜிப்பவர் யாரானாலும் அவர் விரும்பியதை அடைவது நிச்சயம். எனவே, நீங்களும் விரதமிருந்து பூஜித்து நினைத்ததைப் பெறுவீர்கள்' என்று சொல்லி மறைந்தார்.
ஈசனின் திருவாக்கினாலேயே சிவராத்திரியின் மகிமையை அறிந்து மெய்சிலிர்த்துப்போன விஷ்ணுவும் பிரம்மாவும், அவர் கட்டளையின்படியே தூய மனத்துடன் சிவராத்திரி விரதமிருந்து தங்களின் அஸ்திரங்களை மீண்டும் அடைந்தார்கள்.
இதன் மூலம் சிவராத்திரியின் மகத்துவத்தை அறிந்து கொண்ட இந்திரன் முதலான தேவர்களும் கந்தர்வர்களும் கூட, சிரத்தையாகச் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து சிறப்படைந்தார்கள். இந்த விதமாகவே சிவராத்திரி விரதம் மூவுலகங்களிலும் பரவி, சகல ஜீவராசிகளும் முக்திபெற வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.

Spiritual Information Shared by Thiruvannamalai Tour.

Email : baranisouravraga

What's app : 9843827908.
May be an image of 1 person

Comments