ஓளவைக்கு கனிகொடுத்த நாவல் மரம்...தெய்வமாக வணங்கும் மக்கள் :

 


ஓளவைக்கு கனிகொடுத்த நாவல் மரம்...தெய்வமாக வணங்கும் மக்கள் : இன்றுவரை காய் காய்க்காததன் மர்மம்!?
ஓளவைக்கு முருகன் கொடுத்த நாவல் பழம் தந்த மரம்
ஆத்திச்சூடி தந்த அவ்வை ஒரு நாள் பாண்டிய நாட்டிற்கு வந்தாள். பாண்டிய நாட்டின் வட கோடியில் வீற்றிருக்கும் சோலைமலையில் உள்ள, பால தண்டாயுதபாணி முருகனைப் பார்க்க வந்தார். மலை மீதேறி நடந்து வந்த அந்த தமிழ் பாட்டியின் கால்கள் வலிக்கத் துவங்கியது. கரடு முரடான பாதை வேறு. இருந்தாலும் முருகனை நினைத்துக் கொண்டே சிரமப்பட்டு மலை ஏறினாள். நடக்கும் வழியில் சிற்றோடையாய் ஓடிக் கொண்டிருந்த, நூபுர கங்கைத் தீர்த்தம் என்ற அந்த தண்ணீரைப் பருகினாள்.
நடந்து வந்த களைப்பை அந்த நீர் சற்று போக்கியது. தண்ணீரின் சுவையும் வித்தியாசமானதாக இருந்தது. எத்தனையோ, விதம் விதமான மூலிகைகள் எல்லாம் கலந்து வந்த நீர் என்பதால், அவ்வைக்கு அந்த தண்ணீர் ஒரு புத்துணர்ச்சியை அளித்தது. குளிர்ந்த நீராக இருந்ததால், அதைக் குடித்ததும், தாகம் எல்லாம் தணிந்து விட்டதைப் போல உணர்ந்தாள். பிறகு, ஓடும் அந்தத் தண்ணீரை அள்ளி எடுத்து, முகத்தை அலம்பினாள். நடந்து வந்ததால் ஏற்பட்ட வியர்வைத் துளிகள் எல்லாம் அந்த தண்ணீரில் கலந்து புண்ணியம் பெற்றன.
எங்காவது சற்று ஓய்வு எடுத்தால் தேவலை என்று தோன்றியது. அருகில் எங்காவது உட்காருவதற்கு இடம் ஏதும் இருக்கிறதா என்று அவ்வையின் கண்கள் தேடியது. சற்றுத் தொலைவில், ஒரு நாவல் பழ மரம் கண்ணில் பட்டது. நன்கு படர்ந்த மரம். மெல்ல அடி எடுத்து வைத்து அந்த மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டாள். அந்த நாவல் மரத்தின் காற்று அவளுக்கு பசியைத் தூண்டியது. கொஞ்ச உணவு கிடைத்தால் போதும். அந்த பசியை மறந்து விட்டு, முருகன் சன்னதியை அடைந்து விடலாம் என்று எண்ணினார். மரத்தின் பக்கத்தில் ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
ஆடுகள் மேய்வது என்றால், அருகில் அதனை மேய்ப்பவன் இருக்க வேண்டுமே, என்று தேடினாள். தட்டுப்படவில்லை. ஆனால், அழகிய குழல் ஓசை கேட்டது. அந்த ஓசை வந்த திசையை நோக்கினாள். அந்த நாவல் பழ மரத்தின் கிளையில், ஒரு சிறுவன் இருந்தான். அவன் தான் குழலின் ஓசைக்குச் சொந்தக்காரன். ஆடு மேய்ப்பவன் ஆனாலும், அவனது முகம் மிகக் களையாக இருந்தது.
அவன் திடீரென்று அவ்வையைப் பார்த்துக் கேட்டான். “என்ன பாட்டி சோர்ந்து போயிருக்கே, பசிக்குதா”, என்றான். அவன் கேட்ட விதம் அவ்வைக்குப் பிடித்திருந்தது. “ஆமா பசிக்குது. மரத்தின் மேலே தான் இருக்கே. கொஞ்சம் நாவல் பழங்களைப் பறித்துப் போடேன்” என்றாள். அந்தச் சிறுவன் திரும்பக் கேட்டான். “சரி பாட்டி, சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?” என்றான். நாடெங்கும் தமிழ் வளர்த்து, அறிவை உயர்த்தியிருக்கும் அவ்வைக்கு அந்தக் கேள்வி புதிராக இருந்தது. பழத்தில் என்ன சுட்ட பழம், சுடாத பழம், ஏதோ, சிறுவன் விளையாட்டாய் கேட்கிறான், என்றெண்ணி, “சரி, சுடாத பழத்தையே பறித்துப் போடு” என்றாள்.
சிறுவன், மரக்கிளையை உலுக்கினான். பழங்கள் தரையில் சிதறின.சில பழங்களை எடுத்தாள். மண் ஒட்டியிருந்தது. அதனைப் போக்க வாயால் பழங்களை ஊதினாள். உடனே, மரத்தின் மேலேயிருந்த சிறுவன் சொன்னான், “என்ன பாட்டி பழம் சுடுதா, ஊதி ஊதி சாப்பிடுகிறாயே” என்று சிரித்தபடி கேட்டான்.
அவ்வை திடுக்கிட்டாள். ஆடு மேய்க்கும் சிறுவனின் வார்த்தைகள் போலத் தெரியவில்லையே, என்றெண்ணி, நீ யாரப்பா? என்றாள். உடனே, அந்தச் சிறுவன் தன் சுய உருவைக் காட்டினான். யாரைத் தேடி மலை எங்கும் நடந்தாளோ, அந்த முருகன் தான், அவ்வைக்கு காட்சி தந்தான். தன் மெய் மறந்து முருகனைத் துதித்தாள் அவ்வை.
மதுரை அழகோயிலுக்கு மேலே உள்ள சோலைமலையில், முருகன் அவ்வைக்கு பழம் பறித்துப் போட்ட மரம் என்று ஒரு பழமையான நாவல் பழ மரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால், இது வரை இந்த மரத்தில், நாவல் பழங்களே விளைவதில்லை. இருந்தாலும், புராணப் பெருமையைப் போற்றும் விதத்தில், இன்றும் முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை என்ற சோலைமலையில் உள்ள இந்த மரத்தை பக்தர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Spiritual Information Shared by Thiruvannamalai Tour.

Email : baranisouravraga

What's app : 9843827908.

May be an image of 1 person

Comments